கலைஞர்களின் கூத்து
கலைஞர்கள், நாம் அறிந்தேயிராத, வேறு வேறான, புதிர்கள் நிறைந்த உலகில் வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தஉலகங்கள் ஆச்சர்யமான பாவனைகளும், வினோத புருசர்களும் நிரம்பியுள்ளதாகக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். நிலவைப் போலவோ, ஒருகதிரவனைப் போவோ, அல்லது பல்வேறு நட்சத்திரங்களைப் போலவோ தினசரி பார்க்க முடியாத அவர்களின் உலகங்கள், சில அபூர்வ தருணங்களில் மட்டும்,அதிகாலையில் ஞாபகமிருக்கும் கனவின் சிறுதுளி போல யாருடைய கண்களுக்கேனும் தட்டுப்படக்கூடுமென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கலைஞர்களின் உலகங்களுக்குள் பயணம் செய்வதற்கு ஏற்கனவே சொல்லி வைக்கப்பட்ட தெளிவான விதிமுறைகள் இல்லை. எனவே, இதற்கு முன்பயணம் போனவர்களின் வழித்தடங்களும் இல்லையென்றே சொல்கிறார்கள். கலைஞர்களாக மாறுவதற்கும், அவர்களது உலகைக் காண்பதற்கும்பிறப்பே காரணமென்று ரொம்ப காலமாய்ச் சொல்லி வந்ததை நல்லவேளை இன்று யாரும் மதிக்கவில்லை. கலைஞர்களின் உலகம் சூட்சுமமாகத்தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பொழுது, இதுதான் அது என்று கண்டுணரும் குணம் தெய்வீகத் தன்மையுடன் தொடர்புடையது என்பது தீவிரமாகமறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அது யாருக்கு, எப்பொழுது, எந்த கணம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதில் பல்வேறு குழப்பங்கள்உள்ளன.

ஒருமுறை, அது ஒரு பெரிய கருத்தரங்கம். மக்கள் கலைகளைப் பற்றிய விவாதம் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக பரமசிவராவ் வந்திருந்தார்.அவரோடு அவரது பாவைகளும்.

பரமசிவராவ், மிக முக்கியமான கிராமியக் கலைஞர். அதி முக்கியமானவர். ஏனென்றால், அழிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டார் கலையின் கடைசிக்கலைஞர். தனது பாவைகளை விற்கும் அவலத்தை இன்றளவும் தவிர்த்து வரும் தோற்பாவைக் கூத்துக் கலைஞர்.

தோற்பாவைக் கூத்து என்ற நாட்டார் கலையைத் தென் தமிழகத்து வாசகர்கள் அறிந்திருப்பார்கள். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரையில், அதாவது1990களின் துவக்கம் வரையில் இக்கலைஞர்கள், ஒற்றை மாட்டு வண்டியைக் கட்டிக் கொண்டு, குடும்பமாகக் கிளம்பி, கிராமம் கிராமமாகவந்து கூத்து நிகழ்த்தி வந்தார்கள். அவர்கள் நிகழ்த்தும் இராமாயணக்கூத்து மிகப் பிரபலம். (அவர்களைப் பற்றியும், கூத்து பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அ.கா. பெருமாள் எழுதிய புத்தகங்களைப் பாருங்கள்).

நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். இக்கலைஞர்களிடம் கூத்து நடத்துவதற்கான பாவைகள் உண்டு. வளமையானக் காலங்களில் நூறு, இருநூறுபாவைகள் வைத்திருந்த கலைஞர்கள் கூட உண்டு. இந்தப் பாவைகள் ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட தட்டையான பாவைகள். ஆட்டுத் தோலில்கதாபாத்திரங்கள் வரையப்பட்டு உருவான தோல் பொம்மைகள். கதாபாத்திரங்கள், வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டவை. மேனியெங்கும்யோனிகளாய் நிரம்ப சாபம் பெற்ற இந்திரனைப் போல் இவற்றின் தேகமெங்கும் ஒளி புகுந்து சுடருவதற்கான ஆயிரம் துளைகள்.

தோற்பாவை நிழற்கூத்தின் சூட்சுமம் இதுதான்: துளைகள் நிரம்பிய, வண்ண வண்ண தோற்பாவைகளின் பின்புறமிருந்து ஒளியைப் பாய்ச்ச, பாவைகளின் வண்ணநிழல் திரையில் விழுந்து கூத்து களைகட்டுகிறது. கட்டப்பட்ட மெல்லிய வேட்டித் துணியில் பாவைகளின் வண்ண நிழல் புரள்கிறது.

அன்றைய தினம் பரமசிவராவ் தனது பாவைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பொழுது அவரிடம் எழுபது, எண்பது பாவைகள் போலஇருந்தன. வழக்கமாய் திரைச்சீலை கட்டிய கூண்டுக்குள் பாவைகளோடு மட்டுமே பார்த்தும், பேசியும் நிகழ்ச்சி நடத்திய பரமசிவராவுக்கு அன்றுஎங்களோடு மாறுபட்ட ஒரு சூழல். பார்வையாளர்களான எங்களோடு நேருக்கு நேராய் உட்கார்ந்து பேச வேண்டிய முறையில் ஏற்பாடு. அவரது வலது,இடது புறங்களில் பாவைகள் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கப்பட்டுள்ளன.

அன்றைய தினம் அவர் கூத்து நிகழ்த்த வரவழைக்கப்படவில்லை. கருத்தரங்கொன்றில் பேசும்படி அழைக்கப்பட்டிருந்தார். அவரது வாழ்க்கை, குடும்பம்,கலை, பாவைகள், கூத்து என்று பல்வேறு செய்திகளை நேரடி உரையாடல் மூலமாக அவரிடமிருந்து தெரிந்து கொள்வது போன்ற ஏற்பாடு. அவர்அதற்குத் தயாராகவே இருந்தார். தனது கலை அழிந்து வருவது பற்றியும், அது காப்பாற்றப்பட வேண்டிய அக்கறை பற்றியும் அவர் கவலையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது மனவேதனை பங்கேற்பாளர்களான எங்களை ஒரு குழந்தையைப் போல தொற்றிக் கொண்டது. இறந்து கொண்டிருக்கும்கலையொன்றின் கட்டிலை சுற்றி நாங்கள் அனைவரும் கையாலற்று நிற்பது போல் உணர்ந்தோம். இறுக்கமான முகத்தோடு மரணம் நிகழ்வதைவேடிக்கை பார்க்கும் இந்த மனநிலையை எங்களில் பலர் அந்நிகழ்வு முடியும் வரையில்கூட தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயம், எங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லும் தோரணையில் அவர் தனது இருபுறங்களிலும் அடுக்கப்பட்டுள்ள தோற்பாவைகளைக்கையிலெடுத்து காட்டி பேசவேண்டி வந்தது. முதலிரு தருணங்களில் எளிதாக இருந்த இக்காரியம் நேரம் செல்லச் செல்ல குழப்பமும், சிக்கலும் நிறைந்ததாகமாறத்துவங்கியது. நேரம் ஆக, ஆக, பரமசிவராவ் எங்களுக்குக் காட்ட விரும்பிய பாவைகள் அவரது கைகளில் சிக்க மறுத்தன. எனவே,ஒவ்வொரு முறையும் அவர் தன்னோடு கொண்டு வந்த எழுபது, எண்பது பாவைகளையும் தேடிய பின்பே அவர் காட்ட விரும்புகிற அந்த ஒன்றைக்கண்டுபிடிக்க முடிந்தது.

இதற்கான காரணங்கள் இருந்தன. ஒவ்வொரு கதாபாத்திரம் தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு பாவைகள் இருந்தன. எடுத்துக்காட்டாக,சீதை என்றதும், திருமணத்திற்கு முந்தைய சீதை, மணக்கோல சீதை, வனவாச சீதை, அசோகவன சீதை, தாயான சீதை எறு பல்வேறு வகைகள்.இந்த வகைகளுக்குள் தான் தேடும் பாவையை அடைவதற்கு பரமசிவராவ் அதிகமாக சிரமப்பட வேண்டியிருந்தது.

பாவைகளைத் தாமதமாக எடுக்க நேர்வது குறித்து பரமசிவராவ் கொஞ்சம் கொஞ்சமாய் பதட்டமடைவதை எங்களால் உணர முடிந்தது. அவரது இயல்புகெட்டுக் கொண்டிருக்கிறது. அவரது உடலியக்கம் தாறுமாறாக மாறுகிறது. அவரது கைகள் பரபரவென பாவைகளுக்குள் அலைகின்றன.திக்குத் தெரியாத காட்டில் மதமேறிய யானை போலிருந்தன அவரது கைகள். கருத்தரங்க அறையில் அன்றைய தினம் நிலவிய அமைதி அவரை மேலும்மேலும் கிலியடையச் செய்திருக்க வேண்டும். இருட்டறை விலங்கைப் போல் அவர் வலமும் இடமுமாய் பாவைகளுக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறார்.இடப்புற பாவைகள் வலப்புறமும், வலப்புற பாவைகள் இடப்புறமுமாய் அவரோடு கூட சதிராடிக் கொண்டிருக்கின்றன. இதனிடையே தன் கையில் சேர்ந்தபாவைகள் சிலவற்றை சற்று தூரமாய் விழும்படி வீசவும் வீசினார். அவர் விரும்பிய பாவையின் ஸ்பரிசம் தேடி வெறியாய்த் திரிந்தன அவரது கைகள்.

தோற்பாவைகள் கிழிந்து விடும் என்று நாங்கள் பயந்தோம். அவர் எங்களுக்காக இவ்வளவு பதட்டம் அடையத் தேவையில்லை என்றுஎங்களுக்கே பட்டது. பதட்டத்தில், தனது பாவைகளைதானே சிதைத்துக் கொள்வாரோ என்ற பயம் எங்களுக்கு. அங்கும் இங்குமென அவர்பாவைகளை வீசுவதில் நாங்களும் பதட்டம் கொள்ளத் துவங்கினோம். அவரை இப்படியே தொடர விட்டால் பாவைகளைக் கிழித்து எறிந்த பின்பு தான்நிம்மதியாவார் போல் தோன்றியது. நாங்கள் அவரைக் குறுக்கிட்டோம்.

சமாதானப்படுத்தும் வகையில், பாவைகளைக் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லையே என்றோம். எங்களை ஏறிட்டு சிரித்தவர் (இயலாமையின்புன்னகை?) எங்கே போகும்? என்று சொல்லி மறுபடியும் தேடத் துவங்கினார்.

அவரது வேகத்தைப் பார்க்கையில், எங்களுக்காகத் தனது பாவைகளைக் கிழித்துவிடக்கூட அவர் தயாராகிவிட்டது போலிருந்தது. பாவைகளை விடவும்மனிதர்கள் மேலானவர்கள் என்பது ஏதாவதொரு கோட்பாட்டின்படி சரியே என்றாலும், அவரது அடுத்த நாள் வாழ்க்கைப்பாட்டிற்குமனிதர்களைவிடவும் அவர் பாவைகளையே நம்பியிருக்க வேண்டுமென்பது தான் யதார்த்தம். எங்களை முன்னிட்டு அவர் பாவைகளை இழந்துவிடுவதுபுத்திசாலித்தனமான காரியமில்லை. எனவே, வலுக்கட்டாயமாய் நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்தினோம்.

ஏறக்குறைய வன்முறையைப் பிரயோகித்து தான் அவரை அன்றைய தினம் நிறுத்த வேண்டியிருந்தது. இரண்டு பேர் அவரது இரண்டு புறமும் நின்று அவரைப்பிடித்துக் கொண்டார்கள். அவரது பரபரக்கும் கைகளை பாவைக் குவியலிலிருந்து அவர்கள் அப்புறப்படுத்தினார்கள். அவரால் தூக்கி விசிறப்பட்ட(ஏறக்குறைய அப்படித்தான்) பாவைகளை எடுத்து அடுக்கினார்கள். பின்பு நிதானப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு குவளை தேநீர் தந்தார்கள்.பரமசிவராவ் எங்களைப் பார்த்து மறுபடியும் சிரித்தார்; பின்பு தேநீர் பருகினார்.

தான் தேடுகிற பாவை எங்கே ஒளிந்திருக்கும் என்ற பார்வையை அவர் இன்னமும் விட்டபாடில்லை. தேநீரை அவர் பருகிய வேகத்தைப் பார்த்தால்பழையபடி பதட்டமடையத் தயாராவது போலவே இருந்தது. நாங்கள் திரும்பவும் அவரிடம் பொறுமையாகச் சொன்னோம். நீங்கள் கூத்து பற்றியும்,உங்களது அனுபவம் பற்றியும் பேசினாலே போதுமானது. பாவைகளை இறுதியில் நிதானமாகப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் தேடுவதைப் பார்த்தால்எங்கே பாவைகள் கிழிந்து போகுமோ என்று பதட்டமாக இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக எங்களது எந்த சமாதானமும் அவரிடம் செல்லுபடியாகவில்லை. அவர் மறுபடியும் பாவைகளுக்குள் புகுந்து வரவே விரும்பினார்.பாவையைத் தேடி எடுக்காத வரையில் அவர் அமைதியடையப் போவதில்லை என்று தெரிந்தது. பாவைகளை சேதப்படுத்துவதிலிருந்து அவரை எது தடுத்துநிறுத்தும்? நாட்டார் கலைகள் பற்றிய கருத்தரங்கொன்றில் பாவைகளைக் கிழித்து எறிவதைப் போன்ற அபத்தம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?எங்களின் மீதும், நாங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கைகள்மீதும் அவர் எவ்வளவு தூரம் மரியாதை வைத்திருந்தால் தனது பாவைகளைக்கூட உதாசினப்படுத்தும்மனநிலையை பெற்றுக் கொண்டிருப்பார்?

இறுதியில் நாங்கள் இப்படிச் சொல்ல வேண்டி வந்தது; பரமசிவராவ், நீங்கள் எங்களுக்கு பாவைகளைக் காட்டுங்கள். ஆனால், அவைகளைத்தேடும்போது நிதானமாகத் தேடுங்கள். உங்களது வேகமும், பதட்டமும், சமயங்களில் அவற்றை விசிறுவதும் பாவைகள் கிழிபடுவதற்கான வாய்ப்புகளைஏற்படுத்திவிட முடியும். உங்களால் இன்னும் கொஞ்சம் மெதுவாய் அப் பாவைகளைக் கையாள முடியாதா?

இதற்கு பரமசிவராவ் எங்களுக்குச் சொல்லிய பதிலே இங்கு முக்கியமானது. அதனை அசாதாரணமான ஒன்று என்றே நான் புரிந்து கொள்கிறேன்.ஆனால் நிறையபேர் அதைச் சாதாரணம் என்கிறார்கள். ஒருவேளை சாதாரணத்திற்கும் அசாதாரணத்திற்குமான இடைவெளியில் அந்தப் பதில் வந்துசேரக் கூடும். நிறைய பேருக்கு அவரது பதில் புரியவில்லை. அர்த்தம் புரிந்த சிலரோ பரமசிவராவ் என்ற கலைஞனின் உலகிற்குள் உன்மத்தம்பிடித்தவர்களாகத் திரிந்தார்கள். அவர் அன்றைய தினம் சொல்லிய மிக எளிமையான பதில் இதுதான்; பாவைகளை நிதானமாய், மெதுவாய் எப்படிக்கையாளுவது?

இந்தப் பதிலின் அசாதாரணம் உறைப்பதற்கு புரிந்து கொள்வதற்கு பாவைக்கூத்து குறித்த சில அடிப்படை தகவல்கள் தேவையாக இருக்கலாம்.பாவைக்கூத்து ஒரேயொரு கலைஞரை மட்டுமே மையப்படுத்தி அமைவது. பின்பாட்டு பாடுகிறவர்கள், இசைக்கலைஞர்கள் என நான்கு பேர் வரைஇருப்பார்கள் என்றாலும், அந்த முதன்மைக் கலைஞரே மொத்த நிகழ்வையும் தீர்மானிக்கிறவர். பரமசிவராவ் போன்ற இம்முதன்மைக்கலைஞர்கள் திரைச் சீலைக்குப் பின்பு, படுதாவினால் செய்யப்பட்ட கூண்டினுள் அமர்ந்திருப்பார்கள். அவரைப் பார்வையாளர்கள் சாதாரணமாய் பார்க்கமுடிவதில்லை. திரைச் சீலைக்கு பின்னனிருந்து அவர் தன்னந்தனியாளாய் பாவைகளுக்கு விசையாட்டிக் கொண்டிருப்பார். காட்சிகளின் தன்மைக்கேற்ப சிலசமயம் சொற்பமான பாவைகளையும், சில சமயம் எண்ணிக்கையில் அதிகமான பாவைகளையும் அவர் இயக்க வேண்டிவரும். அப்பொழுதெல்லாம்அக்கலைஞர் தனது கைகளைப் போலவே கால்களையும் பாவிக்க வேண்டியதிருக்கும்.

இதனிடையே கதையை அவரேதான் பாடலாக பாடவேண்டியுள்ளது; உரைநடையிலும் பேச வேண்டியுள்ளது; பாவைகளுக்கேற்ப விதவிதமானக் குரல்களில்பேசுவதையும் செய்ய வேண்டியுள்ளது. கூத்து துவங்கி முடியும் வரையிலும் ஒரே சமயத்தில் பல்வேறு நபர்களின் வேலைகளைச் செய்ய வேண்டிய இக்கலைஞர், பெருத்தசப்தத்துடன் இயங்கக்கூடிய இயந்திரம் தான். கதையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, சம்பவங்களின் உக்கிரம் கூடக்கூட இக்கலைஞரின் ஒட்டு மொத்தஉடலசைவும் வேகமெடுத்து பிரவாகமாய் ஓடிக் கொண்டிருக்கும். படுதாக்களால் மறைக்கப்பட்ட திரைச்சீலையின் பின்புறம் சென்று கூத்தைத் துவங்கியதுமுதல் அதிரத் துவங்குகிற இக்கலைஞர் கூத்தை முடித்துவிட்டு வெளிவருகையில் ஆடிக்களைத்து மல்லாந்து வீழ்ந்த பாவைகளுக்கும் அவருக்கும்வித்தியாசமில்லை.

பரமசிவராவ் போன்ற பாவைக்கூத்துக் கலைஞர்களின் துடிக்கும் உடலியக்கத்தை பார்வையாளர்கள் என்றைக்குமே பார்க்க முடிந்ததில்லை.அவ்வியக்கம் புனைகதையாக உருமாறி வண்ண நிழலோட்டங்களாக மிளிர்வதை மட்டுமே அவர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அதன் பின்புறம் ஒருகலைஞன் பாவைகளோடு நடத்தும் ஊழிக்கூத்து பார்வையாளகளுக்கானது இல்லை.

ஆனால், பரமசிவராவைப் பொறுத்த அளவில் பாவைக்கூத்து என்பது பாவைகளோடு கொள்ளும் மின்னல் வேக அசைவுகள் தான். அவரது உலகில்பாவைகள் நிதானமாய் நகர்பவையல்ல. புனைகதையின்படி சோகமே உருவாய், மெல்லிய அசைவுகளுடைய அசோகவனத்து சீதை, திரைச்சீலையில்நிதானமாய் நகர்ந்தாலும், அந்நிதானத்தை நிகழ்த்துவதற்கு கலைஞன் அசுரவேகத்தில் இயங்க வேண்டியிருக்கும்.

தோற்பாவை நிழற்கூத்தை பார்வையாளர்களாக உள்வாங்குவதற்கும், கூத்துக் கலைஞராகப் புரிந்து கொள்வதற்குமான வேறுபாடு நமக்குமலைப்பையே ஏற்படுத்துகிறது. நளினமும், சிருங்காரமும், வண்ணம் கசியும் ஒளியும், தன்போக்கில் இழுத்துச் செல்லும் கதையாடலுமென அழகுசொட்டுகிறது நாம் பார்க்கும் பாவைக்கூத்து. ஆனால் அதற்காக, ஏறக்குறைய அதன் எதிர் திசையில், கதையின் வேகத்திற்கு இணையாக,கதாபாத்திரங்களின் உக்கிரத்திற்கு ஈடுகொடுத்துக் கொண்டு, புனையப்பட்ட காலவெளியில் பாவைகளோடு விரைந்து கொண்டிருக்கிறது கலைஞர்களின்உலகம். சிருங்காரம் மிளிரும் கலை வெளிப்பாட்டிற்குப் பின்னால் உடல் வலியும் வேதனையும் பிடுங்கித் தின்ன கலைஞர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்என்பது பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டிய உண்மை.

பரமசிவராவிற்கும் தோற்பாவைகளுக்குமான உறவை யோசிக்கையில் கூத்து சார்ந்ததாக மட்டுமே அமைந்திருப்பது விளங்குகிறது. பாவைகளோடுஅவரது கைகள் புரளத் துவங்கிய மறுகணமே அவரது உடல் புனைவின் தாளகதியில் இயங்கத் துவங்கிவிடுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பதட்டம்போலவும், பரபரப்பு போலவும் காட்சி தரும் அவரின் அசைவுகள், திரைச் சீலையில் வண்ண நிழல்களாக மாறும் பொழுது கதையாடலாக விரிகிறது.

தோற்பாவைகளை நிதானமாய் கையாளுவது என்றால் என்ன? என்று பரமசிவராவ் கேட்ட கேள்வி எந்த உலகத்தைச் சார்ந்தது?பார்வையாளர்களான எங்களைப் பொறுத்த வரையில், அக்கேள்வியில் அறியாமையும், வெகுளித்தனமும் நிரம்பி வழிந்தன. ஆனால், இதே கேள்விகலைஞனின் உலகில் எவ்வளவு தீர்க்கமான, தர்க்க ரீதியான, பகுத்தறிவு சார்ந்தவொன்றாக மாறுகிறது?

தோற்பாவைகள், அவைகளின் இயந்திர யோனித் துளைகள், வண்ணங்கள், பாவைகளின் முதுகெலும்பாய் நிற்கும் மூங்கில் குச்சிகள், பெரிய சைஸ் குண்டுபல்புகள், குறுக்கும் மறுக்குமாய் ஓடும் தாம்புக் கயிறுகள், அங்குமிங்குமென அலையும் வலது இடது கைகள், பாவைகளை தாங்கிக் கொள்ளும் கால்விரல்கள், திரைக்கு அப்பால் சப்தமிடும் பார்வையாளர்கள், புராணக் கதையோட்டங்கள், பாவைகளின் துள்ளல், துவளல், ஆடல், நெளிவு, கர்ணம் என்றுகூத்துக் கலைஞனின் உலகம் வேறொரு ஒழுங்கில், வேறொரு உலகமென இயங்கிக் கொண்டிருக்கிறது.

தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்கள் மட்டுமல்ல, எல்லாக் கலைஞர்களுமே தங்களுக்கேயுரிய உலகமொன்றைக் கொண்டிருக்கிறார்கள்என்றுதான் சொல்ல வேண்டும். அந்த உலகம் அவர்களது ஞாபகங்களாலும், வாசனைகளாலும், தேவைகளாலும், விளக்கங்களாலும்நெய்யப்பட்டிருக்கிறது. சடங்குகளும், சம்பிரதாயங்களும் அங்கே கறாராய்க் கடைபிடிக்கப்படுகின்றன. அவ்வுலகம் நிர்பந்திக்கிற சங்கடங்களும்,வேதனைகளும் அதனை மேலும் மேலும் பொருள்கூடியதாய் மாற்றிக் கொண்டிருக்கிறது. சிலருக்கு அது தெய்வ சந்நிதானம்; சிலருக்கு போதை; வேறுசிலர் அவ்வுலகினுள் பித்தம் தலைக்கு ஏறி முடிவுறாது உலாவந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு முறை வில்லுப்பாடகர் முத்துசாமிப் புலவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரும் இப்படியே தான் சொன்னார். பலகைகளாலும், மரக்கட்டைகளாலும்அப்பொழுது தான் கட்டப்பட்டிருந்த வில்லுப்பாட்டு மேடையைப் பார்த்து, இந்த மேடை பல லட்சம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்றார். அந்தமேடையில் எனக்கு முன் வியாசமுனி துவங்கி எத்தனை எத்தனையோ பாடகர்கள் வந்து கதையைப் பாடியாச்சு. அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கும்நான் பாடிக் கொண்டிருக்கிறேன். நான் பாடுவதை எனது கலைமுன்னவர்கள் அத்தனை பேரும் அதோ ஆகாயத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு கலைஞனும் தனது கலையைப் பற்றி இவ்வாறு விதவிதமாகக் கற்பனை செய்தபடியே வாழ்ந்து வரமுடிகிறது. இந்தப் பண்பாட்டின் நீண்ட பெரும்கதைசொல்லி மரபில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் முத்துசாமிப் புலவர் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறாரா அல்லது வானுயர வளர்ந்துவிடுகிறாரா? இதனை நாம் விளங்கிக் கொள்ளும் இடைவெளியில் முத்துசாமிப் புலவர் போன்றவர்கள் வெள்ளையாய் சிரிக்க மட்டுமே செய்கிறார்கள்.

பொன்ன குறிச்சியில் பேசிக் கொண்டிருந்த குயவர் இன்னொரு வகை. தாமிரபரணி நதிப்படுகை மண்ணைக் குவித்து, சண்டு கலந்து மண்பாண்டங்கள் செய்கிறகுடும்பம். தலைமுறை தலைமுறையாய் மண்சார்ந்த வாழ்க்கை. தங்களுக்கென சாமி சிலை செய்ய வேண்டி வந்ததால் மண்ணையே குழைத்து செய்து கொண்டிருந்தார்.அம்மன் பாதி தூரம் வளர்ந்திருந்தாள். முழுதும் வளர்ந்த பின், சுட்டு எடுத்தால், ஜொலிப்பாளாய் இருக்கும்.

இப்பொழுதெல்லாம் சாமி சிலைகளைக் கல்லில் வடிப்பது தானே வழக்கம்? நீங்கள் குயவர் என்பதால் சுடுமண் சிற்பமாக செய்கிறீர்களா?

சிலை செய்து கொண்டிருந்த குயவர் கொஞ்ச நேரம் போல் சென்று, இல்லை. கல்லை விடமண்ணு தாங்க கடினமானது என்றார்.

அவசரத்தில் மாற்றிச் சொல்கிறார் என்று பட்டது. மண்ணை விடவும் கல் தானே இறுக்கமானது? நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே?

இல்லையே, மாற்றிச் சொல்லவில்லையே. சரியாகத் தானே சொல்கிறேன். கல்லைவிட மண் தான் கடினமானது, சக்தி வாய்ந்தது, தொடர்ந்துஅம்மனை வனைந்து கொண்டேயிருந்தார். கல்லுக்குள் ஒரு பொருளைப் போடுங்க. மண்ணுக்குள்ளயும் போடுங்க. மண்ணுக்குள்ள போட்டது நாளடைவில அழிஞ்சிபோகும்? ஆனால் கல்லுக்குள்ள போட்டது? அப்படியே இருக்கும். இப்ப சொல்லுங்க, எது சக்தி வாய்ந்தது? கல்லா, மண்ணா?

தன்னுள் விழுகிற அனைத்தையும் தானாகவே மாற்றிவிடுகிற மண்ணின் சக்தி கல்லிற்கு இல்லைதான். கல், அசையாமல் இருக்கிறது. மண் தொடர்ந்துஇயங்கிக் கொண்டிருக்கிறது. கடினம் என்பதும் சக்தி என்பதும் பொருளின் இயல்பில் இல்லாமல், அவற்றின் விளைவில் மறைந்திருப்பதை பொன்னகுறிச்சிகுயவர் குடும்பம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அப்படியானால் அவர்கள் ஒவ்வொரு முறை மண்பாண்டங்கள் செய்கையிலும், கல்லை விடவும் கடினமான மண்ணைத்தானே பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாம் அறிந்திருக்கும் பொலபொலவென உதிரும் மண், குழையும் மண் அவர்களது உலகில் இருக்கவில்லை என்பது எவ்வளவுஆச்சர்யம். காலம் காலமாய் மண்ணை மிதித்து, கைகளால் வளைத்து, வித வித உருவங்களில் வனைந்த மரபு தனது மண்பாண்டக் கலையை மையமிட்டுஉருவாக்கியுள்ள உலகம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் இல்லை.

THANKS
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005