திருவிறையாக்கலி
திருவிறையாக்கலி


திருவிறையாக்கலி எனும் சொல்லை ஒரு சத்தியப் பிரமாணச் சொல்லாகத் தமிழ் மக்கள் பண்டை நாளில் போற்றி யுள்ளனர். இறைவ னுக்குக அல்லது ஒரு பொது நலனுக்காக வைக்கப்பெறும் ஒரு பொருளை யாரும் எடுக்கக் கூடாது என்பதற் காக அனைவரும் அறிய அது திருவிறையாக்கலி என ஒரு சத்தியச் சொல்லைக் கூறுவர். அவ்வாறு கூறப் பெற்ற பிறகு யாரும் அப்பொருளைத் தீண்ட மாட்டார்கள். அதுபோலவே அறிவழியல்லாது ஒரு பொருளை ஈசனுக்கு என்று கூறி அதனைப் பயன்படுத்த வேண்டினால் கூட அது தவறு என அந்தப் பொருளையும் யாரும் தீண்ட மாட்டார்கள். தமிழகத்திற்கே உரிய இப்பண்பாட்டுக் கோட்பாடுகள் தலையாய சிறப்புடையவையாம்.இன்றும் கிராமப்புறங்களில் இத்தகைய சத்தியப் பிரமாண வாக்குகளுக்கு மதிப்பு அளிக்கும் நடைமுறை சாகாமல் இருப்பது ஆறுதலான செய்தியாகும். சேக்கிழார் பெருமான் வரலாறு, திருவரங்கத்தில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஆகியவற்றோடு பெருக வாழ்ந்தான் எனும் ஊரில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பண்பு நெறி ஆகியவை பற்றி இனிக் காண்போம்.திருநாட்டியத்தான் குடியில் நிகழ்ந்தது...திருவாரூர் மாவட்டத்தில் எழில் கொஞ்சும் நாட்டியத்தான் குடி எனும் ஊர் உள்ளது. அங்கு வேளாண் மரபில் தோன்றிய கோட்புலியார் என்பவர் சோழ அரசனின் துணைத் தலைவராக விளங்கினார். அடிக்கடி போர் மேற்செல்லுபோதெல்லாம் திருக்கோயில்களின் அமுதுபடிக்காக நெற்குவியல்களை வழங்கிச் செல்வார். ஒருமுறை கோயிலுக்காக. அவர் அமைத்த நெற்கூடுகளில் நெல் மிகுதியாக இருந்தது. அப்போது போருக்காகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே தன் குடும்பத்தார், தாயத்தார் அனைவரையும் கூட்டி நெற்கூட்டில் உள்ள நெல்லனைத்தும் திருக்கோயில்களுக்காக வைத்துள்ளேன். அதனை யாரும் எடுக்கக் கூடாது. இது "திருவிறையாக்கலி' எனப் பிரமாணம் செய்து விட்டுப் போர்க்களம் சென்றார்.நெடு நாட்கள் போரில் வெற்றி பெற்று பரிசல்களுடன் ஊர் திரும்பினார். தான் பெற்ற பரிசல்களைச் சுற்றத்தாரிடமும் தாயத்தாரிடமும் வழங்க அனைவரையும் அழைத்தார். அது போழ்து நெற்கூடுகள் அனைத்தும் நெல்லின்றி இருந்தமையைக் கண்ணுற்றார். யார் எடுத்தனர் என்று ஏவலர்களிடம் வினவினார். போர் மேற்சென்ற போது ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்டதாகவும், நெல்லின்றி வருந்தியதால் பின்பு இறைவனுக்கு வைத்துவிடலாம் எனக் கருதி உறவினர் அனைவரும் எடுத்து உண்டனர் என அறிந்தார்.திருவிறையாக்கலி கூறிய நெல்லை எடுத்து உண்டவர் யாராயினும் கொல்லாமல் விடேன் எனக் கூறி, தனது வாளை எடுத்துத் தன் தாய், தந்தை, மனைவியர், சுற்றத்தார் என அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். அப்போது ஒரு சிறு பால் அருந்தும் குழந்தை மட்டும் எஞ்சியிருந்தது. அக்குழந்தையையும் வெட்டி வீழ்த்தச் சென்ற கோட்புலியாரிடம் ஏவலர் ஒருவர் பால் குடிக்கும் குழந்தை அந்த அரிசியை உண்ணவில்லையே ஏன் அக்குழந்தையையும் தண்டிக்க வேண்டும் என வினவினார். உடனே கோட்புலியார் ஆணையை மீறி உண்ட தாயின் பாலைப் பருகிய அக்குழந்தையும் குற்றமுடையதே எனக் கூறி அக்குழந்தையை மேலே எறிந்து தன் வாளால் வீழ்த்தினார். அக்கணமே நாட்டியத்தான் குடி நம்பியாகிய ஈசன் உமையோடு இடபாரூடராய்க் காட்சி தந்து குழந்தை உட்பட இறந்த குடும்பத்தார் அனைவரையும் எழச் செய்ததோடு, கோட்புலியாருக்கும், தாயத்தார் அனைவருக்கும் சிவப்பேறு அருளினார்.திருவிறையாக்கலி கூறிய கோட்புலியார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகக் கொள்ளப் பெற்றார். சுந்தரரின் சமகாலத்தவரான கோட்புலியாரை சுந்தரர் நாட்டியத்தான்குடி சென்று சந்தித்தார். அப்போது கோட்புலியார் தன் மகள்களை சிங்கடி, வனப்பகை எனும் இருவரையும் சுந்தரர் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். சுந்தரரோ அவ்விருவரையும் தன் மகள்களாக ஏற்றுக் கொண்டதோடு அவரது தேவாரப் பதிகங்களில் தன்னை ""சிங்கடி அப்பன்'' என்றும் ""வனப்பகை அப்பன்'' என்றும் கூறிக் கொள்கிறார்.திருநாட்டியத்தான் குடி திருக்கோயில் சோழர் காலத்தில் இடம் பெற்றிருந்த கோட்புலி நாயன்மார்களின் உருவச் சிலை பிற்காலத் திருப்பணிகளின் போது இடம் பெயர்ந்து அவ்வூர் ஆற்றங்கரையில் கிடந்தது. தோளில் உடைவாளைச் சாத்திய நிலையில் நாட்டியத்தான்குடி ஈசனை வணங்கும் கோலத்தில் அவ்வுருவச்சிலை உள்ளது. அவ்வூர் கோயில் சுவரில் கோட்புலியாரின் வரலாறு, வண்ண ஓவியமாக இரண்டு காட்சிகளில் காணப் பெறுகின்றது. ஒரு காட்சியில் சுற்றத்தாரையும் குழந்தையையும் வாளால் வெட்டி வீழ்த்துதலும், அடுத்த காட்சியில் ஈசன் விடைமேல் காட்சி நல்க கோட்புலியாரும் குழந்தை உட்பட வீழ்ந்த சுற்றத்தார் அனைவரும் எழுந்து வணங்கி நிற்பதையும் காணலாம்.திருவரங்கத்தில் நிகழ்ந்தது...முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் நெல்லூர் வரை படை எடுத்துச் சென்று தமிழகம் முழுவதும் தன் ஆட்சி நிலைபெறுமாறு செய்தான். திருவரங்கன் பால் அளவிளா ஈடுபாடு கொண்ட அப்பேரரசன் பலமுறை துலாபாரம் செய்தான். ஒருமுறை தன் பட்டத்து யானை மீது தான் அமர்ந்தவாறு துலாபாரம் கொடுக்க விரும்பினான். அதற்கென ஒரே எடையுடைய இரண்டு படகுகளை காவிரியில் நிறுத்தச் செய்து, ஒரு படகில் தன் யானையுடன் ஏற அப்படகு நீரில் அமிழும் அதே அளவு மறுபடகு அமிழுமாறு பொன், முத்து, பவளம் என நவமணிகளையும், மற்ற உயர்ந்த பொருள்களையும் இடச் செய்தான். பின்பு அவை அனைத்தையும் எடுத்துச் சென்று திருவரங்கன் கோயில் மண்டபத்தில் கொட்டினான். அப்போது அவனுக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. தன் பட்டத்து யானை மீது தான் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஓர் உருவச்சிலையை எடுத்து அரங்கன் சன்னதியில் வைக்க வேண்டும் என்று ஆணையிட்டு விட்டு மதுரை நகர் சென்றான்.கோயில் நிர்வாகத்தார் அரங்கன் முன்பு மனிதனின் உருவச் சிலை வைப்பதற்கு உடன்படவில்லை. அரசன் கொட்டிய நவநிதியக் குவியலை யாரும் தீண்டுவதில்லை என முடிவு எடுத்தனர். அவ்வாறே செய்தும் காட்டினர். ஈராண்டுகள் கடந்தன. மீண்டும் சுந்தரபாண்டியன் வந்து தன் தவறு உணர்ந்து மீண்டும் அப்பொருள்களை அரங்கனுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய பின்பே ஏற்றுக் கொண்டனர். கோயிலொழுகு எனும் அரங்கத்து வரலாறும், சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்களும் இதுபற்றிக் கூறுகின்றன. பாராளும் மன்னனாய் இருந்துங்கூட, அஞ்சாமல் அறம் காத்த ஸ்தானத்தார் துணிவு போற்றுதற்குரியதாகும்.பெருக வாழ்ந்தானில் நிகழ்வது...பண்டை நாளில் மட்டும் தான் இத்தகைய பண்பு நெறிகள் இருந்தன என்றில்லை. இன்றும் நம் தமிழகத்துக் கிராமங்களில் அத்தகு பண்புகளுக்குக் குறைவே இல்லை. திருவாரூர் மாவட்டம் பெருக வாழ்ந்தான் எனும் ஊர் சோழர்கள் காலத்தில் "பெருவாழ்வு தந்தான் சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரால் அழைக்கப்பெற்றது. இவ்வூரில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அய்யனார் திருவிழா குதிரை எடுப்புவிழாவாக நிகழ்கின்றது. அய்யனார் கோயில் பூசகர்களாக அவ்வூர்க் குயவர் (குலாலர்) குடும்பத்தார் இருக்கின்றனர். ஆண்டுதோறும் 15 அடி உயரத்தில் இரண்டு குதிரைகளையும், 5 அடி உயரத்தில் பதிமூன்று குதிரைகளையும் மண்ணால் செய்து, சூளையில் இட்டுச் சுட்டு, பஞ்சவர்ணம் தீட்டி விழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்வர். கோயிலில் பறையடிப்பவர் உடலில் அய்யனார் இறங்குவதாகவும், அவர் அக்குதிரைகளைத் தட்டி அனுமதி அளித்த பிறகே அனைத்துக் குதிரைகளையும் அய்யனார் கோயில் திடலில் தெய்வக் குதிரைகளாக வைப்பர்.இவ்விழாவிற்கு என ஆகும் செலவுகளும், அதில் முக்கிய பங்கேற்கும் குயவர், பறையடிப்பவர் ஆகியோரின் ஊதியத்திற்குமாக ஊரின் அனைத்து நில உடைமையாளர்களும், கோயிலுக்கென நெல் அளிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடையின் போது ஒரு குறிப்பிட்ட விகித நெல்லை களத்தில் ஒரு மூலையில் வைத்துவிடுவர். அவர்கள் மட்டுமல்ல அந்த அறுவடைப் பணியில் ஈடுபடுகின்ற விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் பெறும் கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு சேறை (இரு கைகளையும் சேர்த்த நிலையில் எடுக்கப் பெறும் அளவு) நெல்லை எடுத்து நிலவுரிமையாளர் அளித்த நெல்லோடு சேர்த்துக் கொட்டி விடுவர். அவர்கள் அளிக்கும் நெல்லுக்குக் கூலிப் பிச்சை என்று பெயர். இவ்வாறு ஒவ்வொரு களத்திலும் கோயிற்பணியாளர்களுக்கும், குதிரை எடுப்பு விழாவுக்குமாக அளக்கப் பெற்ற நெற்குவியல்கள் பல நாட்கள் கிடக்கும். உரியவர்கள் வந்து எடுத்துச் செல்லும்வரை அதைத் தொடமாட்டார்கள். சாதாரண கூலித் தொழிலாளியிலிருந்து அனைத்துப் பிரிவினரும் இக்கோயிற் பணியில் தங்கள் பங்களிப்பைத் தருகின்றனர். உயர்ந்த ஒரு பண்பு நெறி இன்றளவும் அவ்வூரில் தழைத்து நிற்கின்றது.

No comments: