கைவினைஞர்கள் சூழ்ந்த உலகு





நிலத்தை உழுது தானியம் விளைவிக்கும் உழவர்களின் கூட்டம் ஒருபுறம்; கால்நடைகளை மேய்த்து மந்தையைப் பெருக்கி வாழும் இடையர்களின் கூட்டம் ஒருபுறம் என இரு வேறு தொழில்கள் செய்வோர்தான் கடந்த நூற்றாண்டில்கூட தமிழகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கினர். கிராமம் என்றால் உழவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் மட்டும் முதன்மையிடம் பெறும் நிலையில், சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியது என்ற நிலையில் இன்னும் பலர் தேவைப்படுகின்றனர். இன்றைய ஆடம்பரமான தேவைகள் எதுவும் தேவைப்பட்டிராத கிராமங்களில், வேறுவகைப்பட்ட தேவைகள் குறைவு. எனினும் மக்கள் வாழ்க்கைக்குக் கைவினைஞர்களின் பணி மிகவும் அத்தியாவசியமானதாகும். மர ஆசாரி தொடங்கி பல்வேறு தரப்பினரின் உதவி/சேவையைக் கிராமத்தினர் பயன்படுத்திக் கொண்டதால்தான், அவர்கள் வேறு ஊருக்குப் புலம் பெயர்தல் குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை.

உழவுத் தொழில் செய்திட, நிலத்து மண்ணைப் புரட்டிட ‘ஏர்’ என்னும் மரக்கருவி அடிப்படையானது. மரத்தை வெட்டி, நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி, துளையிட்டு, ஒன்று சேர்த்து ஏராக வடிவமைப்பதற்கு மர ஆசாரி தேவைப்படுகிறார். மரவேலை செய்வது பற்றிய தொழில் நுட்ப அறிவும், அதற்குத் தேவைப்படும் கருவிகளும் மர ஆசாரியிடமே இருந்தன.

ஏரின் நுனியில் பொருத்தப்படும், ஓர் அடி நீளமான ‘கொழு’ எனப்படும் இரும்புத்துண்டு அத்தியாவசியமானது. இரும்பை உருக்குவதுடன், இரும்பைப் பழுக்க நெருப்பில் காய வைத்து, சம்மட்டியால் தட்டி வேண்டிய வடிவில் உருமாற்றிட கொல்லர் எனப்படும் தொழில்நுட்பவாதி தேவைப்படுகின்றார். ‘கொல்லம்பட்டறை’ எனப்படும் இரும்பு வேலை தொடர்பான பட்டறை ஓரளவு பெரிய கிராமங்களில் எல்லாம் இருந்தது. தோலினால் செய்யப்பட்ட துருத்தியின் மூலம் நெருப்புஉலையினுள் காற்றைச் செலுத்தி, இரும்பைப் பழுக்கக் காய்ச்சிட முயன்றது நுட்பமான விஷயம். ‘கொழு’ இல்லாவிடில் கூர்மையான மர நுனியினால் மண்ணை உழுவது என்பது சிரமமானது.

உழவுக்குத் தேவைப்படும் மண்வெட்டி, கோடாரி, அரிவாள் போன்ற இரும்புக் கருவிகளைக் கொல்லர்கள் கிராமத்தினருக்குத் தாராளமாகச் செய்து வழங்கினர்.

சாமான்களையும் ஆட்களையும் இழுத்துச் செல்லும் மரவண்டிகளை மர ஆசாரிகள், தங்களுடைய கைவேலைத் திறமையினால் நுணுக்கமாகச் செய்தனர். மரச் சக்கரங்களுக்கு இரும்புப் பட்டா போட வேண்டியது அவசியம். இல்லாவிடில் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் மரச் சக்கரம் நொடியில் விழுந்து நொறுங்கிவிடும். இரும்புப் பட்டாவை நெருப்பிலிட்டுச் சூடேற்றி, மரச் சக்கரத்தில் திணிக்கும் கொல்லரின் கைத்திறனும் தனித்தன்மை வாய்ந்தது.

மரவண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகள் தொடர்ந்து பல மைல்கள் சுமையைத் தாங்கி இழுத்துச் செல்லும்போது, கால் குளம்புகள் தேய்ந்துவிடும். எனவே இரும்பிலான லாடங்கள் மாட்டின் குளம்புகளில் இரும்பு ஆணிகள் மூலம் பொருத்தப் பெற்றன. மாட்டின் குளம்புகளுக்கேற்ற இரும்பு லாடங்களை வடிவமைப்பதுடன், மெல்லிய இரும்பு ஆணிகள் தயாரிப்பதும் கொல்லர்களின் வேலையாக இருந்தது. அறுபதுகளில் எங்கள் ஊர் கொல்லம்பட்டறையின் முன்னர் ‘பட்டா’ போடுவதற்கான மாட்டு வண்டிகளும், லாடம் அடிப்பதற்காகக் காளைகளும் காத்துக் கிடந்தன.

கிராமத்தில் காரை வீடு எனப்படும் மச்சு வீடுகள் இருபது இருந்தால் பெரிய அதிசயம். அப்புறம் தென்னங் கைகள் மீது பாவப்பட்ட சீமை ஓட்டு வீடுகளும், பெரிய எண்ணிக்கையில் ஓலை வீடுகளும்தான் இருந்தன. தென்னை மரத்தை அறுத்துக் கைகளாக மாற்றிட ஆசாரியினால்தான் முடியும். ஊருக்கு வெளியே ‘ரம்பப் பள்ளம்’ இருந்தது. பத்தடி நீளமும் ஆறு அடி அகலமும் ஆறு அடி ஆழமும் மிக்க குழியின் மீது மரத்தை வைத்து, குழிக்குள்ளிலிருந்து ஒருவரும், குழிக்கு மேலிருந்து ஒருவரும் ரம்பத்தை மேலும் கீழும் இழுத்து, துண்டுகளாக்கினர். பெரும்பாலும் கேரளாவிலிருந்து வந்த மர ஆசாரிகள் ‘ரம்பக் குழி’யின் மூலம் கூலிக்காக மரத்தை அறுத்துத் தந்து கொண்டிருந்தனர். முன் மண்டையில் குடுமி வைத்திருந்த மலையாளி ஒருவர் -‘குடும்பி’ என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டவர்-எங்கள் ஊரில் இருந்தார். வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தினர் இன்று அடையாளம் இழந்து முழுக்கத் தமிழராகப் போய்விட்டனர்.

நுட்பமாக மரவேலைகள் செய்யத் தெரிந்த மர ஆசாரிகள் எங்கள் ஊரில் இருந்தனர். அணிப்பிள்ளை சுப்பையா போன்றவர்கள் மரவேலைக்குப் பெயர் பெற்றவர்கள். வீடு கட்டுகின்றவர்களிடம் மர ஆசாரிகள் பவ்வியமாகப் பேசினர். அவர்களும் ஆசாரிகளிடம் இணக்கமாகப் பேசினர். பரஸ்பரம் மரியாதை நிலவியது. வெறுமனே காசுக்காக வேலை பார்க்கின்றவர் என்று வீட்டுக்காரரும் நினைக்கவில்லை. வெறுமனே காசுதானே என்று ஏனோ தானோவென்று ஆசாரியும் வேலை செய்யவில்லை. கைவினைஞர்களுடன் ஆன உறவு ஒருவிதமான அன்னியோன்னியமாகக் கிராமத்தில் நிலவியது. இன்று கைவினைஞர்களுடனான உறவு வெறும் வணிக உறவாக மாறிவிட்டது.

மண்ணைப் பிசைந்து சரியான பக்குவத்தில், சுழற்றிவிடப்படும் சக்கரத்தின் நடுவில் வைத்துப் பானை அல்லது சட்டி அல்லது தட்டு என வடிவமைத்து, அவற்றை நிழலில் உலர்த்தி, சூளையிலிட்டுச் சுட்டு, எல்லோருக்கும் தேவைப்படும் பாத்திரங்களைத் தரும் குயவர்கள் வெறும் கைவினைஞர்கள் மட்டுமல்ல. மனிதநாகரிகத்திற்கான ஆதாரம். குடும்ப வாழ்க்கை, குடியிருப்புகள் தோன்றுவதற்கான பின்புலத்தில் யோசித்துப் பார்த்தால் சட்டி பானைகளின் முக்கியத்துவம் புலப்படும். இறைச்சி அல்லது தானியத்தை நேரடியாக நெருப்பிலிட்டு வாட்டுவது ஒரு புறம். சட்டியிலிட்டு அவற்றைச் சமைப்பது என்பது நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. மனித இருப்பில் பக்குவப்பட்ட நிலை என்பது சமைக்கப்பட்ட உணவுடன் நெருங்கிய தொடர்புடையது. ஈரமான களிமண்ணிலிருந்து சட்டி, பானையை உருவாக்கும் தொழில்நுட்பம் அறிந்த குயவர்கள் மனித குல நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நாகரிகம் பற்றிய மதிப்பீட்டினுக்கு அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மண்பாண்டச்சில்லுகள் முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன. பெரிய கிராமங்களில் வேளார் என அழைக்கப்படும் குயவர்களுக்கெனத் தனியாக நிலங்கள் கிராமத்தின் சார்பில் பயன்பாட்டினுக்கென விடப்பட்டிருந்தன. தங்கள் ஊருக்கெனக் குயவர் வேண்டும் என வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்டவருக்கு ஊரின் சார்பில் மானியமாக நிலம் தரப்பட்டிருந்தது.

குயவர்கள் கிராமத்துக் காவல் தெய்வம் என அய்யனாருக்கு ‘மண்குதிரைகள்’ செய்து கொடுத்தனர். நேர்த்திக் கடன் செய்து கொண்டவர்களுக்காக மாடு, கன்றுக்குட்டி, நாய், பிள்ளைத் தொட்டில் போன்ற மண் பொம்மைகளும் செய்து கொடுத்தனர். மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி தூக்கி ஆடி வருகிறவர்களுக்கு, மண் சட்டியையும் செய்து தந்தனர்.

கோடைக்காலத்தில் புதிய மண்பானையில் தண்ணீரை வைத்துக் குடித்தால் ஜில்லென உடலுக்கு இதமாக இருக்கும். ‘பானாக்கம்’ எனப்படும் புளி, வெல்லம், எலுமிச்சை கலந்த பானம், புதிய மண்பானையில் தயாரித்து வைத்து, ஓரிரு மணிநேரம் கழித்துப் பரிமாறினால், குடிப்பதற்குக் குளிர்ச்சியாக இருக்கும்.

கிராமங்களில் யாராவது ‘அக்கி’ எனப்படும் தோல் நோயினால் துயரமடையும்போது, குயவரிடம்தான் செல்வார்கள். அவர் கோழி இறகு அல்லது மயில் இறகினால் சிவந்த மண் குழம்பை அக்கியின் மீது தடவிவிடுவார். சில நாட்களில் நோய் குணமாகிவிடும். அக்கி நோய்க்கு எனத் தனிப்பட்ட மருந்து எதுவுமில்லை. செம்மண் குழம்பு தடவுவதை அவர்கள் தொண்டாகச் செய்கின்றனர். அதற்கெனப் பணம் எதுவும் வாங்குவதில்லை.

குயவர்கள் கர்த்திகை அன்று வீடுகளில் விளக்கு எரிப்பதற்காக, ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் கிளியாஞ்சுட்டி எனப்படும் சிறிய மண் விளக்குகளை இலவசமாக வழங்குவார்கள். இதற்கென ஊர் மானியம் அவர்களுக்கு உண்டு.

வயலில் அறுவடை முடிந்து களத்துமேட்டில் நெல் அளக்கும்போது, கடைசியில் கொல்லர், குயவர் இருவருக்கும் ‘சுதந்திரமாக’ நெல் வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. நெல் நன்கு விளைந்து, மகசூல் நன்றாக இருந்தால், குடியானவர்கள் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். சில பகுதிகளில் நெல் அரிகளைக் கட்டாக அப்படியே வழங்குவதும் உண்டு. குடியானவர்களுக்காகச் செய்து தருகின்ற வேலைகளுக்குக் கொல்லரும், மண் பாத்திரங்களுக்குக் குயவரும் பணம் பெற்றுக் கொண்டாலும், தங்கள் ஊரிலுள்ள கைவினைஞர்கள் தொடர்ந்து நன்கு வாழ வேண்டும் என்பதற்காகக் களத்துமேட்டில் நெல் வழங்கும் முறையைக் கிராமத்தினர் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வந்திருக்கவேண்டும். மழை இல்லாமல், விவசாயம் சாவியாகப் போனால், அதனால் குடியானவர்களுடன் பாதிக்கப்படுவது, கைவினைஞர்களும்தான்.

கிராமத்தினர் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்புடையவர்கள் சலவைத் தொழிலாளரும் முடிவெட்டும் தொழிலாளரும் ஆவர். சமூக மதிப்பீட்டில் மிகவும் இழிவாகக் கருதப்பட்ட இவர்கள் முன்னொரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக இருந்திருக்கலாம். அல்லது ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இழிவாகக் கருதப்பட்ட தொழிலை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

நாவிதர் அல்லது அம்பட்டையர் என்று குறிப்பிடப்பட்டவர்கள் தலைமுறைகள் தோறும் முடிவெட்டுதல், சவரம் செய்தல், மொட்டை அடித்தல் போன்ற வேலைகளை கிராமத்தினருக்குச் செய்து வந்தனர். பேனும் ஈரும் மிகுந்து கரடிபோல அடர்த்தியான தலைமுடியுடன் திரியும் கிராமத்தினரை, தங்களுடைய ஒப்பனை மூலம் நேர்த்தியாக மாற்றும் கைவன்மை மிக்கவர்களாக இத்தகையோர் விளங்கினர். ஊருக்கு வெளியே மரத்தடி அல்லது சிறிய கீற்றுக் கொட்டகையில்தான் முடி அலங்கார நிலையங்கள் நடைபெற்றன. வெறும் உடம்புடன் உட்கார்ந்திருப்பவர்கள் தலையில் புகுந்து விளையாடும் கத்தரிக்கோல் தெறிக்கும் முடித்துகள்கள் உடல் எங்கும் பரவிடும். ஒரு சிறிய மிஷினை வைத்துச் சிறுவர்களின் தலையைச் சுற்றி நகர்த்துவதால் முடி இழுக்கப்படும்போது, வலியினால் தலை தானாகவே அசையும். ‘அப்பா தலையை அசைக்காதீங்க, காதை வெட்டிப்புடும்’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பார் முடிவெட்டுபவர். வட்டக் கிராப் எனப்படும் முடிவெட்டு தலையில் வட்டமான சட்டியைக் கவிழ்த்ததுபோல இருக்கும்.

வசதியானவர் வீடுகளுக்குச் சென்று காத்திருந்து, ஏழெட்டுப் பேருக்கும்கூட முடியை வெட்டிவிட்டுப் பொறுமையுடன் திரும்பிவரும் நாவிதர் வாழ்க்கை பொருளியல் ரீதியில் பலவீனமாக இருந்தது.

அரிசியில் அரை அளவுதான் முடி இருக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பெற்றோர் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஸ்டைலாக முன்னால் முடிவைக்கச் சொன்னாலும் முடிவெட்டுபவர் மறுத்துவிடுவார். தலையில் முடிரொம்ப இருந்தால் சளி பிடித்துவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.

கிராமங்களில் பலர் செருப்பு அணிவது கிடையாது. எனவே காலில் முள் குத்திக் கொண்டு சீழ்ப் பிடித்து அவதிப்படுவார்கள். பாதத்தில் நுழைந்த முள்ளின் முனை, உள்ளேயே முறிந்து தங்கிவிடுவதால், நடக்கமுடியாமல் சிரமம் ஏற்படும். முள்வாங்கியினால் கூட முள்ளை எடுக்கமுடியாதபோது, நாவிதரிடம் வருவார்கள். முள் குத்தியதால் சிரமப்படுகிறவரை ஓரிருவர் பிடித்து அமுக்கிக் கொள்ள, நாவிதர் சிறிய கூர்மையான கத்தியினால் முள் குத்திய இடத்தைக் கீறிவிடுவதுடன் சீழைப் பிதுக்கி வெளியேற்றுவார். ஓரிரு நாட்களில் முள் குத்திய இடம் குணமடையும். முள்ளை வெளியேற்றுவதற்காகச் செய்யும் வேலைக்கெனத் தனியாகப் பணம் எதுவும் தரமாட்டார்கள். நாவிதரின் பணி சேவை ஆகும். முடிவெட்டுவதுடன் கால் கை விரல்களில் வளர்ந்திருக்கும் நகங்களை வெட்டுதல், தலையைத் திருப்பிச் சொடக்கு முறித்து மசாஜ் பண்ணுதல் என நாவிதரின் பணிகள் பன்முகப்பட்டவையாக விளங்கின. சில சாதியில் தனிப்பட்ட நாவிதர் இருந்தார். அவர் குடிமகன் என்று அழைக்கப்பட்டார். அவரும் எல்லோரையும் அப்பா என்றே அழைப்பார். இறப்பு வீடுகளில் நடைபெறும் சடங்குகளில் குடிமகன்கள்தான் எல்லாச் சடங்குகளையும் முன்னின்று செய்தனர்.

நாவிதர் வீட்டுப் பெண்கள்தான் கிராமத்தில் எல்லா சாதிப் பெண்களுக்கும் ‘பிரசவம்’ பார்த்தனர். இன்று மகளிரியல் மருத்துவரான பெண் டாக்டர் செய்யும் வேலையை, பரம்பரை அறிவின் துணையுடன் நாவிதர் சாதிப் பெண்கள் சிறப்பாகச் செய்தனர்.

பியூட்டி பார்லர், மகப்பேறு மருத்துவர் எனச் சமூகத்தில் கௌரவமாகக் கருதப்படும் தொழில்களைச் செய்த மருத்துவர் குலத்தினராகத் தங்களைக் கூறிக்கொள்ளும் நாவிதர்களின் மதிப்பு இன்றைய கால கட்டத்திலும் தாழ்வாகவே உள்ளது வருத்தமான விஷயம்.

ஏகாளி என்று அழைக்கப்படும் அழுக்குத் துணிகளை வெளுத்து சலவை செய்து தரும் சலவைத்தொழிலாளர்களும் கிராமத்தின் அங்கமாக வாழ்ந்து வந்தனர். பிறப்பு, இறப்பு என எல்லாச் சடங்குகளிலும் சலவையாளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். பெரும்பாலான ஏகாளிகள் வருஷக் கூலிக்குத் தான் வீடுகளில் வேலை செய்தனர். சிலர் உருப்படிக்கு இவ்வளவு என்ற கணக்கில் சலவைத்துணிக்குக் காசு வாங்கினர். வீடு வீடாகப் போய் எடுத்துவரும் அழுக்குத் துணி மூட்டைகளைக் கழுதைமேல் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரைக்குப் போவார்கள். பெரும்பாலும் ஆண்பெண் அடங்கலாகக் குடும்பத்தினர் எல்லாரும் வண்ணான் துறையில் உழைப்பார்கள். உவர் மண்ணைப் பெரிய மண் தாழிகளில் உரைத்து, அதில் அழுக்குத்துணிகளை முக்கி எடுப்பார்கள். நீரால் நிரம்பிய வெள்ளாவிப் பானைகளின் மீது துணியை அடுக்கி வைத்து, பானைக்குக் கீழே நெருப்பை மூட்டி, நீரைக் கொதிக்க வைப்பார்கள். பானையிலிருந்து கிளம்பும் நீராவி அழுக்குத் துணிகளின் வழியே நுழைந்து வெளியே வரும். அப்புறம் ஆற்று நீரில் துணிகளை அலசி, கருங்கல்லில் ‘ஹோ. . .ஹோ’ என சப்தத்துடன் தோய்த்துக் காய வைத்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். பெரும்பாலான சலவையாளர்கள் கல்வி அறிவற்றவர்கள், எனினும் துணிகளை அடையாளம் காண்பதற்காக அழியாத மையினால் குறிகளைப் போடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்குமெனத் தனிப்பட்ட குறி இருந்தது. சேப்பங்கொட்டை மை அல்லது கடையில் விற்கப்படும் மையை சிறிய குச்சியினால் தொட்டு, துணியின் நுனியில் குறியிடுவார்கள். எங்கள் வீட்டிற்குப் பல்லாண்டுகளாகத் துணி வெளுத்த சன்னாசி என்பவர் . . என்று குறியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வருஷக்கூலி பேசும் வெளுக்கும் சலவைத் தொழிலாளர்கள், அந்தக் கூலியை ஆதிக்க சாதியினரிடமிருந்து பெறுவதற்காக, அவர்கள் வீட்டிற்குப் பல தடவைகள் நடந்து கஷ்டப்பட வேண்டும்.

கிராமத்தில் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த தலித்துகளுடைய வீட்டுத்துணிகளைத் துவைத்துத் தருவதற்காகப் ‘புதர வண்ணான்’ என்ற சாதியினரும் எங்கள் ஊரில் இருந்தனர். சமூக சாதிய அடுக்கில் அவர்களை மனித உயிராகக்கூடக் கருதாத கேவலமான சூழல் அன்று நிலவியது.

தட்டான் எனப்படும் பொற்கொல்லரும் கிராமங்களில் இருந்தனர். அவர்கள் தங்க ஆசாரி என்று அறியப்பட்டனர். பெரிய மண் பானையைக் கவிழ்த்தது போன்ற சட்டி அமைப்பில் உமியைக் கொட்டி, நடுவில் கரியினால் கங்கு மூட்டி, அதில் எதையாவது வைத்து ஊதிக் கொண்டிருப்பார்கள். தங்கத்தை எடைபோட கறுப்பும் சிவப்புமான குன்றிமணி விதையைப் பயன்படுத்துவார்கள். குடியானவ வீட்டுப் பெண்கள் தோடு, மூக்குத்தி அணிந்திருந்தாலே பெரிய காரியம். மேல் சாதியினர், வியாபாரிகள் வீட்டில்தான் தங்க ஆபரணங்கள் புழங்கின. வெள்ளிக் கொலுசினைக் காலில் அணிவது அப்பொழுது வழக்கமில்லை. விதம்விதமான மாடல்களில் ஜொலிக்கும் தங்க நகைகள் கிராமப்புறங்களில் மோஸ்தரில்லை. எனவே தேவைக்குத்தக்கபடி தங்க நகைகள் தயாரித்துக் கொடுத்த ஆசாரிகள் ஓரளவு வசதியுடன் வசித்துவந்தனர். குழந்தைகளுக்குக் காது குத்துதல், பெண்களுக்கு மூக்கு குத்துதல் கிராமப்புறங்களில் மும்முரமாக நடைபெற்றன. அதற்கு தட்டார் தேவைப்பட்டார்.

அறுபதுகளில்கூட உடம்பில் பச்சை குத்திக் கொள்வது என்பது கிராமங்களில் வழக்கிலிருந்தது. குறவர் சாதியைச் சார்ந்தவர்கள் பன்றிகளை வளர்த்துக் கொண்டு கிராமங்களில் வசித்தனர். அவர்கள் வீட்டுப் பெண்கள், கிராமத்தில் யாருக்காவது பச்சை குத்தவேண்டுமெனில் வீட்டிற்கே வந்து பச்சை குத்திவிட்டனர். பச்சை மையில் கலக்கப்படுவது தாய்ப்பால் என்று பேசிக்கொள்வார்கள். வீடுகளில் தானியங்களைச் சுமந்து செல்லப் பெரிதும் பனை நார்களினால் பின்னப்பட்ட பெரிய பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவை ‘கடகம்’ எனப்பட்டன. தானியத்தைப் புடைக்கப் பயன்படும் ‘சுலகு’ பனை நாரினால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக அடிக்கடி பிய்ந்துபோகும். அப்பொழுது அவற்றைப் பனைநாரினால் வலுப்படுத்தி சீராக்கிடும் பணியைக் குறவ வீட்டுப் பெண்கள் அருமையாகச் செய்தனர். ஆனால் அவர்களுக்குக் கூலி தருவதற்கு பெரிய வீட்டுப் பெண்கள் கடுமையாகப் பேரம் பேசினார்கள்.

சமையலுக்குத் தேவைப்படும் எண்ணெய், மாட்டுக்குத் தேவைப்படும் புண்ணாக்கு ஆகியனவற்றை மரச் செக்கில் ஆட்டித் தரும் பணியைச் செக்கார் எனப்படும் வாணியச் செட்டியார்கள் செய்தனர். மரச் செக்கில் கட்டப் பெற்றுள்ள காளை மாடுகள் அவற்றை இழுத்துக் கொண்டு நாள் முழுக்கச் சுற்றிவரும். செக்கில் இடப்பட்ட எள், மர உலக்கையினால் நசுக்கப்பட்டு எண்ணெய் வெளியேறும். செக்குத் தொழில்மூலம் கிடைக்கும் எண்ணெய் விற்பனை முழுக்கக் கிராமத்தைச் சார்ந்தே இருந்தது.

தையற்காரர் பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் தையல் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். சிறிய துணிக்கடையின் முன்னால் உள்ள கீற்றுக் கொட்டகையில் குறைந்த பட்சம் இரு தையற்காரர்களாவது இருந்தனர். யார் வந்து துணி கொடுத்தாலும் ‘ம். . . உடனே தந்திடுவோம்’ என்று வாங்குகிறவர், ஒவ்வொருவரையும் ஏழெட்டுத் தடவைகள் இழுத்தடித்துவிடுவார். அதிலும் பொங்கல், தீபாவளி நேரம் சாக்குப்போக்கு சொல்லுவதில் அவர் வல்லுநர் ஆகிவிடுவார். துணியைத் தந்தவர் சட்டைதைத்து விட்டாரா என்பதைக் கேட்க வருவதைத் தொலைவில் இருந்தே பார்த்துவிடும் தையற்காரர், அவருடைய துணியை எடுத்து மிஷினில் வைத்துத் தைப்பதைப்போலப் பாவனை செய்வார். ‘உங்க வேலைதான். காலையில் தந்திடுவேன்’ என்பார். அவர் அங்கிருந்து போனவுடன், அந்தத் துணி மரப்பெட்டிக்குள் போய்விடும். வேறு துணியை எடுத்து வைத்துத் தைக்கத் தொடங்குவார். தையற்காரரின் விருப்பப்படிதான் உடைகள் தயாராகும். அவை தொள தொளவென்று அல்லது இறுக்கமாக இருக்கலாம். பொருத்தமான ஆடை என்பது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது.

எழுபதுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை சலூன், லாண்டரி, டெய்லர்ஸ் ஆகியன ஏற்படுத்தப்பட்டதுதான்.

நாற்காலியில் ஆளை உட்காரவைத்து, உடம்பைச் சுற்றி வெள்ளைத் துணியினால் மூடி, சானை பிடிக்கப்பட்ட கத்தரிக்கோலினால் முடிவெட்டும் சலூன்களில் முன்னும் பின்னும் வைக்கப்பட்டிருந்த பெரிய நிலைக் கண்ணாடிகள் சமத்துவத்தைக் கொண்டு வந்தன. வீடுகளுக்குப் போய், காத்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்த நாவிதர், சலூனை விட்டு எங்கும் நகரவில்லை. ‘பார்பர்’ என்று கௌரவமாக அழைக்கப்பட்டார். சலூன் கடைச் சுவர்களில் கவர்ச்சிகரமாகத் தொங்கிய நடிகைகளின் வண்ணப்படங்கள், சபலமான ஆண்களுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின. கீற்றுக் கொட்டகையில் முடியை வெட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால் ‘தீட்டு’ என ஒதுக்கப்பட்ட நிலைமை மாறியது. சலூன்களில் முகச்சவரம் செய்துகொண்டு, ஸ்நோ தடவி, பவுடர் பூசிக்கொண்டு விஷேசங்களுக்குக் கிளம்பும் மைனர்கள் உருவானது புதிய அத்தியாயம் தொடங்குவதற்கு வழிவகுத்தது.

அழுக்குத் துணி மூட்டைகள், கழுதை என்று மல்லாடிக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளர்களில் இளைஞர்கள் சிலர் ‘லாண்டரிக் கடை’ எனப் புதிதாகக் கிராமத்தில் தொடங்கினர். ‘அர்ஜெண்ட்-3; ஆர்டனரி 7 நாட்கள் எனத் தொங்கவிடப்பட்ட பலகையை எழுத்துக் கூட்டி வாசித்த கிராமத்தினருக்கு விநோதமாக இருந்தது. சட்டையை உடன் தேய்த்துத் தரவேண்டுமெனில், அதற்கெனக் கேட்கப்பட்ட கட்டணம் குறித்து மனதுக்குள் அதிருப்தி இருப்பினும், முணுமுணுப்பு இல்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போயினர். எங்கள் ஊரில் லாண்டரிக்கடை வைத்திருந்த அய்யாக்காளை மிகச் சவடலாகப் பேசியவாறு, துணிகளைக் கங்குப் பெட்டியினால் அயர்ன் செய்து கொண்டிருந்தார். வருஷம் முழுவதும் துணியைத்தோய்த்துத் தந்துவிட்டு, ஏச்சினையும் திட்டினையும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் பொருளாதார ரீதியில் விடுதலைபெற லாண்டரிகள் வழிவகுத்தன.

அறுபதுகளின் நடுப்பகுதியிலே எங்கள் ஊரில் ‘டெய்லர்ஸ்’ எனப்படும் தையற்கடைகள் தொடங்கப்பட்டுவிட்டன. மூன்று அல்லது நான்கு தையல் இயந்திரங்கள் இயங்கிட, கடை முதலாளி, பெரிய மேசையின் முன்னர் நின்று துணிகளை ஸ்டைலாக வெட்டிக் கொண்டிருந்தனர். அவருடைய கழுத்தில் பெரிய ‘அளவு நாடா’ தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலான டெய்லர்கள் தி.மு.க. அல்லது கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபிகளாக இருந்தனர். அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்குச் சார்பான பத்திரிகைகள் கடைகளுக்கு வந்தன. டெய்லரிங் கடையிலும் சலூன்களிலும் தினமும் வந்த தினத்தந்தி அல்லது கட்சிப் பத்திரிகைகள் படிக்க வாடிக்கையாளர் கூட்டம் போகும். டெய்லர்கள் ஓரளவு அரசியலறிவு பெற்றிருந்தனர். எனவே ஆரவாரமில்லாமல் கடைக்கு வருகிறவர்களிடம் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டனர். எங்கள் ஊரில் நாஞ்சில் நாதன் என்பவர் ‘திராவிடநாடு தையலகம்’ என்ற கடையை நடத்தி வந்தார். தொடக்கப்பள்ளிக்கூட மாணவனான என்னிடம்கூட அறிஞர் அண்ணாவின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார்.

எழுபதுகளில் சிதையத் தொடங்கிய கைவினைஞர்களின் வாழ்க்கை, பிற்காலத்தில் இன்னும் மோசமானது. எல்லாவற்றுக்கும் கணக்குப்பார்க்கும் நிலைமையும் விவசாயம் கட்டுப்படி ஆகாத நிலையும், குடியானவர்களைச் சிக்கலுக்குள்ளாக்கியது. எனவே பழைய முறைகளும் பழக்க வழக்கங்களும் மாற்றத்திற்குள்ளாயின. நவீன வாழ்க்கைக்குப் பொருந்திப் போக இயலாத கைவினைஞர்கள், புதிய பிரச்சினைகளை எதிர் கொண்டனர். வேறு தொழில்களோ, கல்வியறிவோ இல்லாதவர்கள் பாடு இன்னும் கஷ்டமானது.

No comments: