நான் புத்தன்




கடைக்குக் காவலாக
சட்டை இல்லா முதலாளி
மட்பாண்டம் விற்றால்தான்
மறைக்கக் கிடைக்கும் துணி

மண் எடுத்துப் பிசைந்து
அளவாய் நீர் சேர்த்து
குடமொன்று ஏற்றி
குவிவாய் வாய் செய்து
கனக்கக் கனக்க
பாண்டம் பிசையும் தொழில்
பாரினிலே படைத்தல் தொழில்

பொங்கலுக்குப் பானை
கார்த்திகைக்கு விளக்கு
ஏற்றி வைத்தால் எப்போதும்
காற்றடித்தாலும் அணையா அடுப்பு
வண்ணக் கிளிஞ்சட்டி
வண்ணப் பானைகள்
நீர் விட்டுச் செடி வளர்க்க
நெட்டைத் தொட்டிகள்
எல்லாம் மண்தான்
என்றாலும் மகத்துவம்தான்
வார்ப்புக்கு உள்ளானால்
மண்ணும் பொன்னாகும்


மண்ணாயினும் மனிதனாயினும்
படைப்பு உயிராகும்
சொல்லாயினும் எழுத்தாயினும்
பொருள் கொண்டால் படைப்பாகும்.


என்னதான் ஆனாலும்
இதே தத்துவத்தில்
போலிகளும் கலந்து போக
மண் ஆகும் என் பிழைப்பு


பூப் போலே வண்ணத்தில்
பொன் போலும் மின்னலிலே
கண் பறிக்கும் கயமையாலே
பிளாஸ்டிக்கே உலகமாச்சு


பொன் வைத்த இடத்தில்
பூ வைத்து ஒரு காலம்
பூ வாய்த்த இடத்தினிலே
மண் வைத்த காலம் மாறி
எது வைத்த போதிலுமே
பிளாஸ்டிக்கே முன் நிற்கும்
மின்னும் பொன்காலம்
மின்னஞ்சல் கற்காலம்


இடுப்புகளின் இரண்டு பக்கம்
எடுக்கும் நீர் பெண் சுமக்கும்
அழகெல்லாம் போயாச்சு
அறிவியலும் வளர்ந்தாச்சு


கார்த்திகை மையிருட்டினிலே
சிரட்டைக்குள் கிளிஞ்சல் ஏற்றி
டார்ச் அடித்து ஊர்வலங்கள்
எல்லாம் பொய்யாச்சு


பொம்மைக் காரோட்டி
பொழுதெல்லாம் வீணாக்கி
இருந்த இடம் விட்டு
நகராத விளையாட்டு


ஐம்பூதம் அளவறிந்து
அடக்கி ஆட்சி செய்து
காலம் மிகக் கருதி
கணத்தில் சமையல் செய்த
காலம் மலை ஏறிற்று.


உருளைக்குள் வாய்வடக்கி
ஓட்டையிலே தீக் கொளுத்தி
காலத்திற்கு கருவி வைத்து
குக்கரிலே வேகும் சோறு
உண்பதற்கு வெறும் பதறு


ஊருக்கு மரம் நட்டு
உறவெல்லாம் பழம் தின்ன
யாரும் நீர் விடாது
தானே வளரும் தலைமுறைகள் போய்


பேருக்குச் செடியென்று
காகிதம் போல் பூப்பூக்கும்
தொட்டில் குழந்தையாய்
தொட்டிக் குரோட்டன்சகள்!
ரிட்டைடு ஆன தாத்தா
தண்ணீர் விடும் மெசினானார்


எல்லாம் பார்த்து விட்டே
நிர்வாணமாய் நானிருக்கேன்
என் வயதிலியே நான் புத்தன்
ஆசனமோ பிளாஸ்டிக் மரம்


இறுதியாய் ஓன்று சொல்வேன்
உறுதியாய் நம்பி ஏற்பீர்
உடம்பாகும் மண் போலே
உற்ற துணை ஏதுமில்லே
மறந்தால் மனிதர் நீங்கள்
மண் ஆகும் உடல் பெறுவீர்

No comments: