மிகப் பெரிய நதிகளின் உற்பத்தி ஸ்தானங்களுக்குச் சென்று பார்ப்பவர்கள் வியப்பில் மூழ்குவர். கண் முன் தெரியும் இந்த சிறிய நீர்ப் பெருக்கு போகப் போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.
இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
வழியில் நிச்சயமாகத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும் என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.
பல இடங்களில் அதன் வழி கரடு முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில் மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை.
ராபர்ட் ·ப்ரோஸ்ட் (Robert Frost) என்ற ஆங்கிலக் கவிஞன் சாகா வரிகளில் கூறியது போல, நதி "I have miles to go before I sleep)-"நான் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது" என அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே, சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.
தான் செல்கின்ற இடம் எல்லாம் செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும் நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை. வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.
மனிதனே நீ நதியைப் போல் இரு. உன் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதே. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறு. வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பாய். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதே. தொடர்ந்து சிறந்து செயல் புரி. தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதே. பயனில்லை.
தொடர்ந்து முன்னேறு. பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதே. உன் பயணத்தைப் பாதைகள் தீர்மானிக்க விட்டு விடாதே. சில சௌகரியமான நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதே. அவற்றையும் மீறி முன்னேறும் போது தான் நீ சரித்திரம் படைக்க முடியும். நதியிடம் இருந்து இந்த மகத்தான ரகசியத்தைக் கற்றுக் கொள். உன் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதே.
உன் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருந்தால் நீ சந்திப்பவர்கள் எல்லாம் உன்னால் பயன் பெறுவர். பலர் சிறக்க நீ பயன்படுவாய். கர்வம் கொள்ளாதே. இத்தனையும் சாதித்து உன் இனிய வாழ்வை இறைவனிடம் ஒப்படைக்கும் போதும் மனிதனே நீ நதியைப் போலிரு. "நான்" என்ற உணர்வை விட்டு "எல்லாம் நீ" என ஆனந்தமாய் பரிபூரணமாய் இறைவனை சரணாகதி அடைவாயாக'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment