தமிழ் சினிமா இயக்குனர்கள் கிராமத்தின் சிறுதெய்வங்களைக் காட்ட வேண்டுமென்றால், அல்லது குறுஞ்சாமிகளின் உக்கிரங்களைப் பிரம்மாண்டமாகக் கலை அழகுடன் காட்ட வேண்டும் எனறால் கேமராவைத் தூக்கிக் கொண்டு நேரே, கிராமங்களின் ஊர் எல்லைகளில் இருக்கிற காவல் தெய்வமான ஐயனார் குதிரை வாகனத்தில் வீற்றிருக்கிற இடத்திற்குச் சென்றுவிடுகிறார்கள்.
ஏனென்றால், இந்த ஐயனார் அமர்ந்திருக்கும் குதிரைகளின் வண்ணங்களும், வடிவங்களும் பார்ப்பவரைப் பரவசப்படுத்துகின்றன. இந்த பிரம்மாண்டமான ‘கலை’ச் செல்வத்திற்குப் பின்னால் தெய்வ நம்பிக்கையும், கலைத்திறனும், கடின உழைப்பும் இருக்கிறது. இச்சாமிகளுக்குப் பின்னால் பல்வேறு நாட்டார்சொல் கதைகளும் விதவிதமாக உள்ளன.
“குதிரை எடுப்பு ‘அல்லது’ குதிரை வெட்டு என்று சொல்கின்ற இந்த கலைக்குப் பின்னால் இருக்கும் ரசனையான சேதிகளை மட்டும் இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.
இக்கலை ‘குயவர்கள்’ என்ற தனி இனக் குழு மக்களால் பரம்பரை, பரம்பரையாகக் கையாளப்படுகிறது.
ஐயனார்சாமியையும், அவர் அமர்ந்திருக்கிற குதிரையையும், விதவிதமாகக் காலங்காலமாகக் குயவர் இன மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இக்கலையை ‘ஒரு தெய்வீகக் கடமை’ என்ற மனசாட்சியுடன் இவர்கள் செங்யகிறார்கள்.
பெரிய, பெரிய குதிரை வாகனங்களைத்தான் இவர்கள் அதிகமாகச் செய்கின்றார்கள். குதிரைகளைத் தவிர மாடுகளின் சிலைகளையும், பெருச்சாளி போன்ற வாகனங்களையும் இவர்கள் தேவை எனில் செய்து கொடுக்கிறார்கள்.
சகலவிதமான சிறு தெய்வங்களின் உருவங்களையும் குயவர்க்ள் சுடுமண் ‘சுதை’களாகச் செய்து விடுகிறார்கள்.
ஒரு காலத்தில் இக்குயவர்களின் வாழ்வும், தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்து கிடந்தது.
மண்ணால், தெய்வச் சிலைகளையும், வாகனங்களையும் செய்கிற இக்குயவர்களின் ஒரு பிரிவினர், சட்டி பானைகளையும், மண் அடுப்புகளையும் செய்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றார்கள்.
இன்றைய உலகமயமாக்கலால் உருத்தெரியாமல் போனதில் இந்தக் கலையாளர்களின் மதிப்பும், மரியாதையும் கௌரவம்தான்.
குலாலர்கள்தான் இன்றும் கிராமாந்தாரங்களில் குலதெய்வங்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் பூசாரிகளாக விளங்குகின்றார்கள். குழந்தை பிறந்தால் கிராமத்து மக்கள் நேரே கோயில் பூசாரியான குயவரிடம் சென்று தன் குல தெய்வத்திற்கு பூஜை வைக்கச் சொல்வார்கள்.
அதே குழந்தை வளர்ந்து வாலிபமாகி, திருமணம் முடிந்து பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து முதியவராகிச் செத்த பிறகும் இதே குயவரிடம் சென்று கொள்ளிக் குடம் உடைக்க பானை கேட்டு நிற்கிறார்கள். இப்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை குலாலர்களின் ‘தேவை’ அன்றைய தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தது. இது தவிர, மக்கள் வணங்குகின்ற சிறு தெய்வங்களையும், பூரண கும்பங்களையும் அக்கினிச் சட்டிகளையும், ஆயிரம் கண் பானைகளையும் கலையழகுடன் செய்து கொடுக்கும் கலைஞர்களாகவும் இவர்கள் திகழ்ந்தார்கள்.
குயவர்கள் பாண்டங்களையும், மண்குவளைகளையும் பல்வேறு உருவங்களையும், சாம்பிராணி போட உதவும் சட்டிகளையும், குழந்தைகள் வைத்து விளையாட பொம்மைகளையும், ஏன் பெண்கள் காதில் அணிந்துகொள்ள ஒரு வித நகைகளையும் கூட இவர்கள் ஒரு காலத்தில் கலைநயத்துடன் செய்து கொடுத்தார்கள்.
கிராம தேவதைகளுக்கும், குறுஞ்சாமிகளுக்கும் இவர்களே பூசாரிகளாகவும் திகழ்ந்தார்கள். மக்களின் வழிபாட்டு முறைகளுக்கும், சடங்கு, சம்பிரதாயங்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டில் இக்குயவர்களுக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு.
குலாலர்களை மையமாகக் கொண்டு கதை சொல்லிகள் இன்னும் விதவிதமான சொல்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

குயவர்கள் செய்யும் மண்பானையை, சித்தர்களும், ஞானவான்களும், நிலையாமை ’ என்ற தத்துவத்தை விளக்க ஒரு குறீயீடாகப் பயன்படுத்தினார்கள்.
குயவர் ஒரு வித மருத்துவர்களாகவும், மாந்திரிகர்களாகவும் உள்ளார்கள். ‘அக்கி’ என்பது ஒரு நோய். வெயில் காலத்தில் பெரிய கொப்பளமாகப் பழுத்து உடம்பில் காணப்படும் இந்த நோய்க்கு ‘அக்கி’ என்று பெயர்.
இந்த கொப்பளம் உடைந்து சலம் வெளியேற அக்கி எழுதுதல் என்ற மருத்துவத்தை இக்குயவர்கள் செய்தார்கள்.
காவிக்கல்லையும், தெக்கம்பாக்கையும்(பாக்கில் ஒரு வகை) பொடி செய்து ஒரு சிரட்டையில்(கொட்டாங்குச்சியில்) போட்டுத் தண்ணீர் விட்டுக் கோழி இறகால் கரைத்த கரைசலை அக்கி என்ற நோய் வந்த இடத்தில் தடவுவார்கள். பிறகு அதே காவிக்கரைசலைக் கொண்டு ஒரு கோழி முட்டையின் மீது மனித முகம் ஒன்றை வரைவார்கள்.
சிரட்டையில்(தேங்காய் ஓடு) உள்ள மருந்தை நோயாளியிடம் கொடுத்து மீண்டும் மீண்டும் அக்கி என்ற கொப்பளத்தின் மேல் போடச் சொல்வார் குயவர்.
முகம் எழுதிய முட்டையை உடையாமல் எடுத்து வைத்திருந்து குயவர் அவித்து தின்று விடுவார். இதனால் நோயாளியின் ‘அக்கி’ முட்டையின் மீது முகமாக இடம் பெற, அதை அவித்து குயவர் தின்பதால், அக்கி எனற கொப்பளமும் அவிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
இச்செயல்பாட்டில், ‘பாவனை மந்திரம்’ என்ற உளவியல் கோட்பாடு செயல்படுகிறது. காவிக்கரைசல் மருத்துவ குணம் உடையது என்பதையும் இங்கு நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘மதி முக்கால்; மந்திரம் கால்’ என்ற பழமொழியின்படி ‘அக்கி எழுதுதல்’ என்ற மருத்துவத்தை குயவர்லர்கள் நோயாளிகளுக்குச் செய்து வந்தார்கள்.
பிராமணர்களைப் போல இவர்கள் இன்றும் (குலால மரபில் பிறந்த ஆண்கள்) பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். இதை ஒட்டியும் ஒரு சொல்கதை வழக்கில் உள்ளது.
‘யானைக்கும் பானைக்கும் சரி’ என்ற கதையும் குயவர்களின் வாழ்வியலில் இருந்து பிறந்ததுதான். குயவர்களின் வம்சாவழி மரபு வந்ததற்குப் பின்னால், சில புராண மரபுக்கதைகளும் உள்ளன.
சட்டி, பானைகளைச் செய்வதற்கு இவர்கள் ‘மணமண்’ என்ற மண் கலவையை உருவாக்குகின்றார்கள். குதில்(குதிர்), மண் சிலைகள் போன்றவைகளைச் செய்ய ‘சண்டு மண்’ என்ற மணகலவையை உருவாக்குகிறார்கள். தன் தொழிலுக்கு ஏற்ற மண் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மண் சேர்க்கை, மணகலவை பற்றிய நுட்பமான அறிவு இவர்களுக்கு தன் மரபில் இருந்து இயற்கையாகக் கிடைத்து விடுகிறது.
இவர்களுக்கு ‘சுழலும் மனை’ யும், சூளை(சுள்ளை)யும் தான் பிரதானமாகும். குயவர்கள் வெறும் மண்ணை அடுப்பாகவும், பொங்கல் பானைகளாகவும்(சாப்பிட) சாமிகளாகவும்(வணங்க) ஆக்கி விடும் பிரம்மாக்களாகத் திகழ்கின்றார்கள்.
இவர்கள் பிசைந்த மண்ணை, மனையின் மேல் வைத்து, மனையைச் சுழல விட்டு, விதவிதமான பாத்திரங்களை தன் கைவிரல்களின் நெளிவு, சுளிவுகளால் செய்யும் நேர்த்தியை அருகில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தாலும் திகட்டாது. இவர்களுக்கு மட்டும் படைப்பே பிழைப்பாகவும் வாழ்வாகவும் ஆயிற்று. குயவரின் சுழலும் மனை சொல்லும் தத்துவங்கள்தான் எத்தனை?!
தட்டுப்பலகை, தட்டுக்கல், கிள்ளுக்குச்சி, வதிச்சட்டி, கடகால், கொத்துக் கரண்டி, காலுருட்டிக் கட்டை, கயிறு, மூங்கில், தென்னை மட்டை, திருகை, பூவரச இலை, மழைக்காகிதம், சாக்கு, அம்மிக்கல், ஈச்சங்குச்சிகள், கோழி இறக்கைகள், அணில்வால் தூரிகை போன்ற மிக எளிமையான பொருள்கள் இவர்களின் கலைப்படைப்பிற்கு கருவிகளாக உதவுகின்றன.
மாடுகளுக்கு நோய் வந்தால், சிறிய மாடுகளின் சுடுமண் சிலைகளைச் செய்து சங்கரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஊமையன் கோயிலுக்கு நேர்ந்து காணிக்கையாக அதைச் செலுத்தினால், மாடுகளுக்கு வந்திருக்கும் நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை எங்கள் வட்டார மக்களிடம் உள்ளது.
இதேபோல், தவளும்பிள்ளைகளின் உருவம் செய்து காணிக்கையாகச் சில கோயில்களுக்கு வழங்கும் பழக்கமும் இப்பகுதி மக்களிடம் உள்ளது. இத்தகைய செயல்பாடுகளில், பாவனை மந்திரம் என்ற உளவியல் சார்ந்த நம்பிக்கை ஆட்சி செய்கிறது.
குயவர்கள் மண்சிலைகளைக் கீழிருந்து மேல்நோக்கிச் செய்கிறார்கள்(சிற்பிகள் கல்லில் மேலிருந்து கீழ் நோக்கிச் சிலையைச் செதுக்குவார்கள்). முதலில் பீடமும், அதன்பின் பாதமும் வைப்பார்கள். பிறகு பீடத்தை ஒட்டிக் கால்வரை வளர்ப்பார்கள்.
அதன்பின் தனியாக ஒரு இடத்தில் இடுப்பு முதல் கழுத்து வரை செய்வார்கள். பிறகு முகம், தலை என்று தனித்தனியாகச் செய்து காயவைத்து பின்னர், அவைகளை ஒன்று சேர்த்து முழு உருவத்தை உருவாக்கி விடுவார்கள்.
இப்படி உருவாக்கிய உருவத்தை(சான்றாக குதிரையை) கவனமாகச் சுள்ளையில் வைத்துச் சுடுவார்கள். சுட்ட சிலையில் சிற்சில இடங்களில் விரிசல் இருந்தால், மணமண, கருப்பட்டி, சிமெண்ட் கலந்த கலவையால் அந்த இடத்தில் பூசி விரிசல் பிறர் கண்ணுக்குத தெரியாமல் சரி செய்து விடுவார்கள்.
இப்படி உருவாக்கிய சுடுமண் சிலைகளின் மேல் விதவிதமான வண்ணங்களைப் பூசி அச்சிலைகளுக்கு மேலும் அழகூட்டினார்கள். பெயிண்டுகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பல்வேறு வண்ணக் கலவைகளை இயறகையில் கிடைக்கும் பொருள்களில் இருந்து உருவாக்கிக் கொண்டார்கள்.
கறுப்பு வண்ணத்தை சிரட்டையை (கொட்டாங்குச்சியை) எரிந்த கரியுடன், சுடுசோறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து தயாரித்தார்கள். நிறமற்ற மண்ணோடு, அவிக்காத பச்சை மஞ்சளையும் சேர்த்து அரைத்து, மஞ்சள் நிற கலவையைத் தயாரித்தார்கள்.
செம்மண்ணையும், மஞ்சளையும் சேர்த்து, ஒரு குடுவையில் இட்டு, குடுவையை எரியும் சுள்ளையின் நடுவில் வைத்துச் சூடாக்கி, காவி நிறக்கலவையைத் தயாரித்தார்கள்.
இதே போல வாவரக்காச்சி என்ற மரத்தின் இலைகளில் இருந்து பச்சை வண்ணத்தைத் தயாரித்துக் கொண்டார்கள்.
‘காக்காய்ப் பொன்’ என்று ஒரு கனிமம், பூமியில் சில இடங்களில் கிடைக்கிறது. மண்போலவே இருக்கும் இத்துகள்கள் ‘ஜிகினா’ போன்று மின்னும் இக்கனிமத்துடன் சில சேர்மானங்களைச் சேர்த்து, ஒரு குடுவையில் இட்டு, அதை எரியும் சுள்ளையில் வேகவைத்துப் பொன் நிறக்கலவையைத் தயாரித்திருக்கிறார்கள்.
வெட்டவெளியில் காற்று, மழை, வெயில் என்ற இயற்கையின் தாக்குதல்களையும் எதிர்கொண்டு இவர்களின் வண்ணப்பூச்சுகள் மிளிர்கின்றன.
இவர்கள் ‘வேளார்’ என்ற மாற்றுப் பெயரால், சில வட்டாரங்களில் அழைக்கப்படுகின்றார்கள். ‘வேள்’ என்றால் ‘மண்’ என்று பொருள் மண்ணை, ஆள்கின்ற(கையாள்கின்ற) இக்கலைஞர்களை ‘வேளார்’ என்று அழைப்பதும் பொருத்தம்தான்.
‘வேள்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் வேளாண்மை, வேளார்(விவசாயம் செய்கிறவர்) போன்ற சொற்கள் உருவாகின. நாலடியாரும் இச்சொல்லை “வேளான் என்பான் விருந்திருக்க உண்ணான்.” என்ற பாடல் வரியில் குறிப்பிடுகின்றார். மண்ணை உழுது மகசூல் செய்கின்றவர்களை ‘வேளார்’ என்று அழைப்பதும் பொருத்தம்தான்.
பூமித்தாயின் மடியில் கிடக்கும் மண்ணை மூலதனமாகக் கொண்டு தன் உழைப்பாலும், கலை உள்ளத்தாலும் மண்ணை மாண்புறச் செய்யும் இக்கலையாளர்களை தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் பிரதிநிதிகள் என்றும் கூறலாம்.

No comments: